செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரின் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரின் மருமகள் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-10 21:45 GMT
செங்குன்றம்,

செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரின் மருமகள் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்து அவரது வீட்டுக்கு வந்த உறவினர்கள் அங்கு நின்ற 2 கார்களை அடித்து நொறுக்கினார்கள்.

செங்குன்றம் அங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். செங்குன்றம் பேரூராட்சியின் முன்னாள் தலைவரான இவர் தி.மு.க. நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் தேவராஜ்(வயது 26). இவருக்கும் செங்குன்றம் புள்ளிலைன் பாலாஜி கார்டன் 5-வது தெருவை சேர்ந்த தேவராஜ்(52) என்பவரது மகள் ஈஸ்வரிக்கும்(24) கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாய்சுகன்(2) என்ற மகன் உள்ளான்.

திருமணத்தின்போது ஈஸ்வரின் பெற்றோர் தேவராஜுக்கு 200 பவுன் நகைகள், ரூ.20 லட்சம் மற்றும் ஒரு சொகுசு காரை வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவராஜுக்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தகராறு பற்றி ஈஸ்வரி தனது தாயாரிடம் போனில் தெரிவித்தார்.

இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட தகராறினால், ஈஸ்வரி வீட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த தேவராஜ் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது அந்த அறையில் ஈஸ்வரி சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தேவராஜ் தகவல் தெரிவித்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் ஈஸ்வரியின் சகோதரர்கள், தந்தை மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவர்கள் வரதட்சணையாக கொடுத்த சொகுசு காரையும் மற்றும் இன்னொரு காரையும் அடித்து நொறுக்கினார்கள். அப்போது தேவராஜ் வீட்டில் பதுங்கி கொண்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் அங்கு விரைந்து வந்து, காரை உடைத்து நொறுக்கியவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், ஈஸ்வரிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் அவரது மரணம் குறித்து அம்பத்தூர் உதவி கலெக்டர் அரவிந்தனும் விசாரணை நடத்துகிறார்.

வரதட்சணை கொடுமை காரணமாக ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்