புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மீனவர்கள் கொலை
‘ஒகி’ புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரைதிரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், நீரோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் கதறிய நிலையில், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் இந்த மீனவர்களை தமிழக அரசு கொலை செய்திருக்கிறது.
இப்போதுகூட உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் மிதப்பதை மீனவர்கள் தான் தேடிக்கண்டுபிடித்து இருக்கிறார்களே தவிர மீட்புக் குழுக்கள் செய்யவில்லை. மீனவர்களின் உடல்கள் மீட்க முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவற்றை மீட்டு முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்த அரசு உதவ வேண்டும். இவர்கள் தவிர இன்னும் சுமார் 600 மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கவும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அச்சம் அதிகரிப்பு
காணாமல்போன மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 7–ம் தேதி ரெயில் மறியல் போராட்டமும், கடந்த 3 நாட்களாக சாலை மறியல் போராட்டமும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவுக்குப் பிறகு கடலில் மீனவர்களின் படகுகளையோ, உடல்களையோ காணவில்லை என்ற பதில்தான் கடலோரக் காவல் படையிடம் இருந்து கிடைக்கிறது.
அதேநேரத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளில் சென்று மீனவர்களின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் இருந்தே அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளின் தன்மையை அறிய முடியும். இது காணாமல்போன மீனவர்களை மீட்பது குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது. எப்பாடு பட்டாவது நமது மீனவர்கள் மீட்கப்பட வேண்டும்.
எனவே, நவீன கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 100 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட வேண்டும். அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.