ஊட்டி மலை ரெயில் என்ஜின் ரேடியேட்டர் வெடித்தது டிரைவர் உள்பட 3 பேர் காயம்

ஊட்டி மலை ரெயில் என்ஜின் ரேடியேட்டர் வெடித்ததால், டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-12-09 20:03 GMT
குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை 7.10 மணிக்கு வழக்கம் போல மலை ரெயில் புறப்பட்டது. ரெயிலில் 163 பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 9.30 மணிக்கு வந்து கொண்டு இருந்தது.

அப்போது பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினில் இருந்த ரேடியேட்டர் திடீரென்று ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் என்ஜினின் உட்புறம் நீராவி சூழ்ந்தது. நீராவி அதிகமாகவே என்ஜின் டிரைவர் பூபதி, உதவி டிரைவர் சதீஷ், ஜெனரேட்டர் ஆபரேட்டர் வினோத் ஆகியோருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனே ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனிடையே என்ஜினின் உட்புறம் அதிகமாக நீராவி வெளியேறியதால் ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் டிரைவர்கள் உள்ளே நிற்க முடியாமல் கீழே இறங்கி விட்டனர். இது குறித்து குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குன்னூரில் இருந்து 2 பெட்டிகளுடன் மாற்று ரெயில் வந்தது. இந்த சம்பவம் காரணமாக மலை ரெயில் 4¼ மணிநேரம் தாமதமாக குன்னூரை சென்றடைந்தது.

காயம் அடைந்த ரெயில் டிரைவர் உள்பட 3 பேரும் மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்