இடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-12-06 23:15 GMT
சென்னை

இடைத்தேர்லில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்ற வரலாற்றை மாற்றி, ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளுந்தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், தி.மு.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்திட கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் களப்பணி அவசியமானது. தமிழக மக்கள் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையே வலிமை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் டிசம்பர் 11-ம் நாள் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.வும், தோழமை கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் நின்று பரப்புரையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தொகுதி என்ற பெருமை மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்கு கிடைத்ததே தவிர, ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதிக்குரிய அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உழைக்கும் தி.மு.க. வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.வின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதை இடைத்தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த உறுதியை குலைத்திடும் வகையில் மாநிலத்தில் ஆள்வோரும், மத்தியில் ஆள்வோரும் பல விதங்களிலும் அதிகாரங்களை பயன்படுத்த முனைவார்கள்.

இதனால், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட கட்சியின் அனைத்து அமைப்பினர் அனைவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து வெற்றி வியூகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் செயலாற்றவேண்டும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி, தி.மு.க.வின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட உடன்பிறப்புகளின் உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியம்.

ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர்.கே.நகரில் தொடங்குகிறது என்கிற வகையில், வெற்றியை குவிக்கும் வீரர்களாக தோழமை கட்சியினர் ஒத்துழைப்போடு களமிறங்கி பணியாற்றுங்கள். இடைத்தேர்தல் வெற்றி மாலையை கருணாநிதியின் தோள்களில் சூட்டி மகிழ்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்