நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி
ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் போது நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்கள் உள்பட 73 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது.
பிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.
வேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மனுவை ஆய்வு செய்து, நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் உணவு இடைவேளைக்கு சென்றனர். அந்த நேர நிலவரப்படி, 72 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதில் அ.தி.மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 42 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், விஷால் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
உணவு இடைவேளை முடித்து, பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவின் மனு பரிசீலனைக்கு வந்தது.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள், ‘ஜெ.தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் பிரமாண வாக்குமூலம் பிரிவில் தகவல்களை பூர்த்தி செய்யவில்லை என்றும், மனுவில் பல்வேறு பிரிவுகளில் தகவல்களை பதிவு செய்யவில்லை என்றும் அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவருடைய மனுவை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்தார்.
அதைத்தொடந்து மாலை 5.20 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவருடைய மனுவில் முன்மொழிந்ததாக கூறப்பட்ட 10 பேரில் சுமதி, தீபன், கார்த்திக்கேயன் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு வந்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், ‘மனுவில் எங்கள் பெயர் போலியாக குறிப்பிடப்பட்டு, கையெழுத்து போடப்பட்டு இருக்கிறது என்றும், நாங்கள் மனம் உவந்து முன்மொழியவில்லை’ என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்கு மீண்டும் நடிகர் விஷால் சென்று, தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறினார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் தன்னிடம் இருந்த ஆடியோ ஆதாரங்களையும், மேலும் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் அறிவித்தார்.
ஆனால் நேற்று இரவு 11 மணி அளவில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. முன்மொழிவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
இதன்படி மொத்தம் தாக்கல் ஆன 145 மனுக்களில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.