புதிய புயல் சின்னத்தால் தமிழகத்தில் கன மழையை எதிர்பார்க்க முடியாது வானிலை மைய இயக்குனர் தகவல்

புதிய புயல் சின்னத்தால் நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தில் கன மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2017-12-05 23:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கியது. இந்த பருவமழையின் தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பெரிய ஏரிகள் நிரம்பாவிட்டாலும் அவற்றில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளது.

கடந்தவாரம் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை பலமாக தாக்கியது. இதன்காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழை மரங்களும் சாய்ந்து விழுந்தன. உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பலத்த சேதம் அடைந்தன. நெல்லை மாவட்டத்திலும் கன மழை பெய்தது. இதன் காரணமாக பல அணைகளில் நீர் மட்டம் ‘மள மள’ வென்று உயர்ந்து உள்ளது.

புயல் தாக்காது

இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வுபகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களை தாக்கும் என்று பெரும்பாலோர் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி 7,8 தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை புயல் தாக்காது என்றும், கனமழையை எதிர்பார்க்கமுடியாது எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலில்தான் பெய்யும்

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது தாழ்வு மண்டலமாக மாறினாலும் ஒகி புயல் மறைந்த பின்னர்தான் இது புயலாக தலை தூக்க முடியும்.

புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் 7,8 தேதிகளில் கன மழையை எதிர்பார்க்க முடியாது. கடலில்தான் கன மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்திற்கு கன மழையை தராது. இந்த நாட்களில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உட்பகுதிக்குள் மிதமான மழைதான் பெய்யும்.

கூடுதலாக 4 சதவீதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 5-ந்தேதி வரை (நேற்று வரை) பெய்யக்கூடிய இயல்பான மழையைவிட 4 சதவீதம் கூடுதலாக பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்