தமிழக, கேரள முதல்-மந்திரிகளுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பேசினார்
‘ஒகி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருடம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பேசினார்.
சென்னை,
சமீபத்தில் வீசிய ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளா மாநிலத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
அந்த பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, அவர்களிடம் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். தற்போது அங்குள்ள நிலை பற்றியும் விசாரித்தார். அதுபற்றி முதல்-மந்திரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.
அதுபோல புயலால் பாதிக்கப்பட்ட லட்சத் தீவுகள் உயர் நிர்வாக அதிகாரி பாரூக் கானையும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தில் விசாரித்தபோது, “புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து நிவர்த்தி அடைவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அந்த மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது” என்று கூறப்பட்டது.
மேலும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மத்திய மந்திரி சபை செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை குழு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், உள்துறை, புவி அறிவியல், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய துறைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
போதிய உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் அதை இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் என்றும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடலில் தத்தளித்த 600 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.