தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை டிடிவி தினகரன் ஆவேசம்

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என டிடிவி தினகரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறினார்

Update: 2017-11-23 10:38 GMT
சென்னை

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புவெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 83 பக்கங்கள் கொண்ட  இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ உத்தரவை பிறப்பித்து உள்ளது.  

இது குறித்து சேலத்தில் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை.122 எம்எல்ஏக்கள், 37 எம்.பி.க்கள் ஆதரவுடன் இருந்தபோது இரட்டை இலையை முடக்கியது ஏன்?

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர். மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்