நளினிக்கு ‘பரோல்’ வழங்கினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவார்

மகளுக்கு திருமணம் செய்துவைப்பதற்காக நளினிக்கு ‘பரோல்’ வழங்கினால் அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடுவார்.

Update: 2017-11-16 23:30 GMT

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

‘என் மகள் ஹரித்ரா 2 வயது வரை என்னுடன் சிறையில் இருந்தாள். அதன்பின்னர், தனது பாட்டியுடன் லண்டனில் வசித்து வருகிறாள். தற்போது அவளுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இதற்காக உறவினர்களோடு கலந்து ஆலோசனை செய்து மாப்பிள்ளை பார்க்கவேண்டும். அதனால், எனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்–அமைச்சருக்கு மனு அனுப்பினேன்.

பின்னர், கடந்த ஜனவரி மாதம் மற்றொரு மனுவும் அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோலில் வெளியில் செல்லலாம். நான் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். எனவே, எனக்கு 6 மாதம் பரோல் வழங்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர், வேலூர் சிறை சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் அவர் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அதில், ‘தன் மகள் லண்டனில் வசிப்பதாக நளினி கூறுகிறார். ஆனால், அதற்கு ஆதாரமான விசா உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. பரோல் கேட்டு விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதியின் நன்னடத்தை குறித்து நன்னடத்தை அதிகாரி அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும். ஆனால், நளினிக்கு அதுபோல பரிந்துரையை அதிகாரிகள் அளிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

மேலும், ‘நளினிக்கு பரோல் வழங்கினால் அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவார் என்ற அச்சம் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அவருக்கு பரோல் வழங்க முடியாது. பரோல் கேட்கும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்