கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தேர்தல் ஆணையர் இன்று மீண்டும் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-14 21:45 GMT
சென்னை,

தமிழக உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர், ‘தொகுதி வரையறை பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்படும் காலதாமதத்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே, இந்த காலதாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகரன் நேரில் ஆஜரானார்கள்.

அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘தொகுதி வரையறை பணியை சுட்டிக்காட்டி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர். தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவு 28-ன் படி, சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வழிவகை செய்கிறது. ஆனால், அதில் சில திருத்தங்களை கொண்டு வந்து, முந்தைய மக்கள் தொகை கணக்கு எடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக நடவடிக்கை எடுத்தது. பின்னர், இந்த புதிய பிரிவை நீக்கிவிட்டது. இவ்வாறு பல வழிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல், தமிழக அரசு இழுத்தடிக்கிறது’ என்று வாதிட்டார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையமும் இழுத்தடிக்கிறது. மாநில அரசை தேர்தல் நடத்தும்படி வலியுறுத்தாமல், அரசியலமைப்பு சட்டத்தின் கடமைகளை ஆற்ற தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நாளை (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்