ரூபாய் நோட்டுகளில் மகாத்மா என்று அச்சிடுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துக்கு கீழே மகாத்மா என்று அச்சிடுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-13 22:45 GMT

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.முருகானந்தம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:–

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்திற்கு கீழே மகாத்மா காந்தி என்று அவரது பெயர் அச்சிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி என்று அவர் தன்னை ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை. மகாத்மா என்ற வார்த்தையை அரசிதழில் அவர் பதிவு செய்யவும் இல்லை.

மகாத்மா என்று குறிப்பிட்டு அவர் எங்கும் கையெழுத்திடவில்லை. ரபீந்திரநாத் தாகூர்தான் காந்தியை மகாத்மா என்று அழைத்ததாக குஜராத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, எந்த அடிப்படையில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தபால் தலைகளில் மகாத்மா என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவில்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தபால் தலைகளில் மகாத்மா என்ற பெயர் பயன்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டுவரும்படி மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு உட்பட்டே ரூபாய் நோட்டுகளில் மகாத்மா என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதுகுறித்து மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த வழக்கை பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கைத் தொடர்ந்து இந்த ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம், மனுதாரர் செலுத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்