விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்

தினத்தந்தி பவள விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Update: 2017-11-06 05:16 GMT
சென்னை

இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9-10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய பிரதமரை தமிழிசை, எச்.ராஜா,இல. கணேசன். எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பூங்கொத்து வரவேற்றார்கள்.

பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார், ஐஎன்எஸ் தளத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைசசர்கள் வரவேற்றனர்.
 
அங்கிருந்து  பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்துக்கு காரில் சென்றார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தினத்தந்தி நாளிதழ் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்