முன்எச்சரிக்கை செய்த பிறகுதான் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்படும்

முன்எச்சரிக்கை செய்த பிறகுதான் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2017-11-04 23:15 GMT

சென்னை,

சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27–ந்தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமான மழை கிடைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூரில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 289 தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு, நீர் தேங்கியிருக்கிறது.

அரசின் தொடர்புடைய அனைத்து துறைகளும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் தீவிரமாக எடுத்து வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 2,864 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நிலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்ளும், தொடர் கண்காணிப்பிலும் இருக்கிறது.

சிறிய ஏரிகள் தற்போது நிரம்பி வருகிறது. நிரம்பும் ஏரிகளின் உபரி நீர் வெளியேற்றுவதற்கு உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து முதல் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு, எந்த மாதிரி திறக்க வேண்டும்? முதல் கட்ட எச்சரிக்கை, 2–ம் கட்ட எச்சரிக்கை மற்றும் 3–ம் கட்ட எச்சரிக்கை என்று வரிசையாக அறிவிப்புகள் கொடுத்த பின்னர் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உபரி நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயப்படும் வகையில் எந்த ஏரிகளும் இல்லை. பெரிய ஏரிகள் எல்லாம் இன்னும் முழு கொள்ளளவை எட்டவில்லை. சிறிய ஏரிகள் முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருக்கிறது. அந்த ஏரிகளில் இருந்து பாதுகாப்பாக தண்ணீரை வெளியேற்றும் நிலையில் தான், முதல்–அமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, 7 கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதா, மாவட்ட கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த பணியை மேற்கொள்வார்கள். பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை வரையிலான நிலவரப்படி 286 புகார்கள் வந்துள்ளன. அதில் பெரும்பாலான புகார்கள் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பது தான். புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இவை 1070 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் வந்த புகார்கள். மாவட்டங்களில் 1077 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களும் அங்கேயே தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும், கண்காணிக்கவேண்டும் முதல்–அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க தான் அமைச்சர் என்ற முறையில் நானும், துறை சார்ந்த அதிகாரிகளும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்