5 லட்சம் பேரை விவசாயிகளிடம் அனுப்பி வைக்க உள்ளேன்’ நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
‘குளங்கள், ஏரிகளை செப்பனிட 5 லட்சம் பேரை விவசாயிகளிடம் அனுப்பி வைக்க உள்ளேன்’ சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள குளங்கள், ஏரிகளைச் செப்பனிடவும் அவை நல்ல நிலையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் எனது நற்பணி மன்றத்தினர், நண்பர்கள் மற்றும் நிபுணர்கள் என 5 லட்சம் பேரை விவசாயிகளிடம் அனுப்பி வைக்க உள்ளேன் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சென்னை அடையாறு, முத்தமிழ் அரங்கத்தில் நேற்று நடந்தது. சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–
அரசியல் மாற்றப்பட வேண்டும்இந்த நிகழ்ச்சியில் பாடிய சகோதரி ஒருவர் என்னை உழவன் மகன் என்றார். நான் உழவன் மகனோ இல்லையோ எனது 2 மாமாக்கள் முழுநேரமாக விவசாயம் செய்தனர். அதனால் நான் உழவர் மகன் இல்லை என்றாலும் உழவர் மருமகன். குழந்தைப் பருவம் முதல் விவசாயத்தின் பெருமைகளையும் அதில் உள்ள பிரச்சினைகளையும் கேட்டு வளர்ந்திருக்கிறேன்.
சினிமாத்துறையை தொழில்துறை என்று அறிவித்துவிட்டார்கள். பெப்சி, கோக் நிறுவனங்களையும் தொழிற்சாலைகள் என்று சொல்கின்றனர். போர் போன்ற அவசர காலத்தில் இவை இரண்டும் இல்லாமல் இந்த சமுதாயம் வாழ்ந்துவிட முடியும்.
ஆனால் குடிநீரும், உணவும் இல்லாமல் இருக்க முடியாது. அதை இன்னும் ஒரு தொழில்துறையாக அறிவிக்காத அரசியலை என்னவென்று சொல்வது? அது மாற்றப்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் யாரோ தனியாக இருக்கிறார்கள் என நினைத்து விடாதீர்கள். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டு பணிவு காரணமாக மட்டுமே அவர்களை தலைவர்கள் என நினைத்துவிட்டு, தொண்டர்களாகவும், சேவகர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என சொல்லித்தந்த நாட்டில் நாம் மன்னர்களாக நடந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் செய்யத் தவறி விட்டார்கள். மக்களின் பெரும் கடமை ஒரு தலைவனைத் தேடுவதல்ல, நமது வேலையைச் செய்வதற்கு ஒரு ஆளை நியமிப்பது.
ஒருவர் டெல்லியில் இருந்துகொண்டு நம்மை ‘தமிழ் பொறுக்கி’ என்றார். நான் பொறுக்கி தான். அதுவும் அறிவு, ஞானம், தேடல் என்னும் பொழுது மகிழ்ச்சியாக எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.
அந்த பொறுக்கலில் எனக்கு ஒரு விஷயம் கிடைத்தது. அமெரிக்காவில் பல அணைகட்டுகளை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். வண்டல் மண்ணை சேர்த்து வைக்கும் கிடங்குகளாக அணைகள் மாறியதே இதற்குக் காரணம். பிற விஷயங்களில் அமெரிக்காவை பின்பற்றுகிறோம் ஆனால் இந்த விஷயத்தில் மறந்து விட்டோம்.
நான் இந்தக் கூட்டத்துக்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை. தமிழகத்துக்கு சோறு சேகரிக்க வந்திருக்கிறேன். தமிழகமும், மராட்டியமும் இந்தியாவிலேயே அதிகமாக வரி கட்டும் மாநிலங்களாகும். ஆனால் பிற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் ஒரு ஆற்றைக் காணவில்லை. அது குறித்து மக்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்லவிருக்கிறேன். இதற்காக எனது நண்பர்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறார்கள். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள குளங்கள், ஏரிகளைச் செப்பனிடவும் அவை நல்ல நிலையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் எனது நற்பணி மன்றத்தினர், நண்பர்கள் மற்றும் நிபுணர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைக்கவுள்ளேன்.
நான் சொல்வதை எல்லாம் செய்வதற்கு கடந்த 37 ஆண்டுகளாக பயணிப்பவர்களும், இன்றைய இளைய தலைமுறையினர் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உங்களிடம் (விவசாயிகள்) வருவார்கள்.
இதற்காக பொக்லைன் போன்ற ராட்சத எந்திரங்கள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் சாதாரண வகை மண்வெட்டியே போதும். நான் அனுப்பும் கூட்டத்தை வரவேற்று, அவர்களுக்கு தோள் கொடுத்து களப்பணியில் ஈடுபடுங்கள். அடுத்த ஆண்டு பேசும்போது குளங்களும், ஏரிகளும் நிரம்பி வழிகிறது என்று கூறுவீர்கள்.
சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் கொள்ளளவு குறித்து தகவல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால் சரியான தகவல் இல்லையென்ற பதில் வந்தது.
வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு கீழ் ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல அதற்கு கீழ் வைரமும், தங்கமும் கிடைத்தாலும் அதை எடுக்காதீர்கள். மேலே நடக்கும் விவசாயம் தொடர்ந்து நடக்கட்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் சொன்னது எனது மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையைச் சூறையாடுவதும், விஞ்ஞானம் என்ற பெயரில் இயற்கையைப் பன்மடங்கு பெருக்க வைக்கிறேன் எனச் சொல்லும் விளையாட்டுகள் நமது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். என் காலும், மனமும் இந்த மண்ணில் பதிவுற்று விட்டது.
நீங்கள் வணங்க வேண்டிய புதிய தெய்வத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் வைத்திருக்கும், தெய்வங்களின் பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மழை, ஆறு, குளங்களையும் கும்பிடத் தொடங்குங்கள். அந்த பயபக்தி உங்களுக்கு வந்து விட்டால் அவை காப்பாற்றப்படும். இதை ஒரு பகுத்தறிவாளர் சொல்லுகிறேன் என்றால் எவ்வளவு பதறிப்போயிருப்பேன் என புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பாலாறு, கொள்ளிடம், மேட்டூர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளை தூர் வார வேண்டும். குடிமரமாத்து பணிகளில் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். தென்பென்னை, ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். பாசனத்திற்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத்தலைவர் தீட்சதர் எஸ்.பாலசுப்ரமணியன், செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் மற்றும் ஸ்ரீரங்கம் பி.ஹேமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.