உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
உயிரோடு இருக்கும் நபர்களின் கட் அவுட், பேனர்களை பொது இடங்களில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோச்சண குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனக்கு சொந்தமான இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நிதிமன்றம், "தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு திறந்தவெளிச் சட்டம்- 1959-ல் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களைக் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்யுமாறும் உத்தரவிடுகிறது.
அதையும் மீறி எப்போதாவது கட் அவுட், பிளக்ஸ், பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தாலும் உயிரோடு இருக்கும் நபர்களுக்கு இத்தகைய கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது.இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் அனைத்து டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து, யூனியன், முனிசிபாலிட்டி மற்றும் மாநகராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது" என்று உத்தரவிட்டது.