ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்- டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் கூறி உள்லார்.

Update: 2017-10-24 09:44 GMT

சென்னை, 

சென்னை ராமாவரத் தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் டி.டி.வி. தினகரன் இன்று அ.தி. மு.க.வின் 46-வது தொடக்க விழாவை கொண்டாடினார். அங்குள்ள காது கேளாதோர் வாய்பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். ஜெயலலிதா படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட 1.5 கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை கட்டிக் காக்க சபதம் எடுத்துள்ளோம். அதில் வெற்றி பெறுவோம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லியில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்கள் போலியானவையாகும். அதில் பலரது கையெழுத்துகள் போலியாக போடப் பட்டுள்ளன. அவர்கள் டெல்லி சென்று தங்களது தரப்பு வாதங்களை எடுத்து சொல்லி புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடு போதுமானது அல்ல. இருப்பினும் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறியுள்ளோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். கடந்த முறை நான் வெற்றி பெறுகிற சூழல் இருந்த நேரத்தில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து டெல்லியில் இருந்து வர உள்ள மூத்த வக்கீல்கள் வாதிட உள்ளனர். அந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்