டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை ஆஸ்பத்திரிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

சென்னை வந்த மத்திய குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2017-10-14 00:00 GMT
சென்னை, அக்.14-

சென்னை வந்த மத்திய குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குனர் டாக்டர் கல்பனா பர்வா, டெல்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச்.எம்.ஜி. குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் சுவாதி டுப்ளஸ், பூச்சியியல் வல்லுனர் டாக்டர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் கவுசல் குமார் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பிவைத்தது.

நேற்று அதிகாலை சென்னை வந்த இந்த குழுவினர் மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர். நேற்று காலை 10 மணி அளவில் அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்துக்கு வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய குழுவினருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர் சிங், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக கமிஷனர் சத்தியகோபால், நில நிர்வாக கமிஷனர் மோகன் பியாரே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அவர்களிடம் மத்திய குழுவினர், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை விரிவாக கேட்டு அறிந்தனர். மேலும் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் கேட்டனர்.

அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய குழுவினரிடம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவாக எடுத்து கூறினர். மத்திய குழுவினருக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அதிகாரிகள் விளக்கினர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு விளக்கமாக கூறினர்.

12.20 மணி அளவில் ஆய்வு கூட்டம் முடிவடைந்தது.

ஆய்வு கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கையை பலப்படுத்தவதற்காகவும், லேப்-டெக்னீசியன், புகை மருந்து அடிக்கும் கருவிகள் வாங்குவதற்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் ரூ.256 கோடி அளவுக்கு கூடுதல் நிதியை உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் மத்திய குழுவிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கும் என்று நம்புகிறோம்.

2 முதல் 3 நாட்கள் மத்திய குழுவினர் தமிழகத்தில் இருப்பார்கள். மேலும் சில நாட்கள் தமிழகத்தில் முகாமிடுவதாகவும் அவர்கள் உறுதியளித்து உள்ளனர். தேவைப்பட்டால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அவர்கள் செல்வார்கள். சேலம், திருச்சி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மத்திய குழுவினர் பிற்பகல் 2 மணி அளவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, நுழைவு வாயிலில் காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு புறநோயாளிகள் பிரிவை பார்வையிட்டு, அங்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த நிலவேம்பு குடிநீரை பருகிவிட்டு, காய்ச்சல் வார்டுக்கு சென்றனர். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர். அதனை தொடர்ந்து நோயாளிகளிடம், டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளிக்கிறார்களா? நன்றாக கவனிக்கிறார்களா? என்று கேட்டனர். இதையடுத்து ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சென்று, அங்கு ஏதும் குறைபாடுகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் ரத்த வங்கிக்கும் மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்தனர்.

இதையடுத்து 3.15 மணி அளவில் டாக்டர்கள் அசுதோஷ் பிஸ்வாஸ், கல்பனா பர்வா, சுவாதி டுப்ளஸ், வினய் கார்க் மற்றும் கவுசல் குமார் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் அங்கிருந்து கிளம்பினார்கள். இதில், சுவாதி டுப்ளஸ், வினய் கார்க் மற்றும் கவுசல் குமார் ஆகிய 3 பேரும் சேலம் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல், அசுதோஷ் பிஸ்வாஸ், கல்பனா பர்வா ஆகிய 2 பேர் மட்டும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாலை 4.50 மணிக்கு சென்றனர்.

அங்கு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும் டாக்டர்களிடம் மத்திய குழுவினர் கேட்டு அறிந்தனர். டெங்கு அறிகுறியுடன் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கவனத்துடன் கேட்டனர்.

மருத்துவமனையில் சென்னை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழிப்புணர்வு பிரசுரங்களையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

அங்கு டாக்டர் கல்பனா பர்வா நிருபர்களிடம் கூறுகையில், “டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திராவிலும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தற்கான காரணம் குறித்து அறிய நாங்கள் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

இதையடுத்து மாலை 5.50 மணி அளவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் அசுதோஷ் பிஸ்வாஸ் மற்றும் கல்பனா பர்வா ஆகியோர் வளசரவாக்கத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

மத்திய குழுவினர் இன்று (சனிக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்