உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அவமதிப்பு வழக்கு: மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தது. பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தவும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, செப்டம்பர் 18–ந் தேதிக்குள் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், நவம்பர் 17–ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 3–ந் தேதி உத்தரவிட்டது.ஐகோர்ட்டின் இந்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தாததால் அவர்களை கோர்ட்டு அவமதிப்பின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.