இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஈழம் தேவை என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தினேன் வைகோ பேட்டி
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஈழம் தேவை என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தினேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வைகோ சென்னை திரும்பினார்.
சென்னை விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெனீவாவில் இருந்து சென்னை திரும்பிய பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 16 ஆண்டில் 4 முறை சுவிட்சர்லாந்து செல்ல விசா மறுக்கப்பட்டது. ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்ததற்கு உதவிய அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் நன்றி.
தமிழர்களின் பிரதிநிதியாக ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்றேன். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசினேன். ஒரு மணி நேரம் கூட இடைவெளியின்றி ஜெனீவா கூட்டத்திற்காக பணியாற்றினேன். இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல: இனப்படுகொலை என்பதை விளக்கினேன். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தனி ஈழம் என்றும் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தினேன். இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசினேன். இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏதுவாக ஐ.நா பொதுச்செயலாளரை அனுப்ப வேண்டும் என பேசினேன். ஈழ விடுதலை யுத்தம் முடிந்துவிடவில்லை. புதிய பரிமாணம் எடுத்துள்ளது. எனக்கு ஆதரவாக குரல்தந்த முதல்-அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.