தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி பதவியேற்கிறார்
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வரும் 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.இந்த நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்தார்.
இதில் தமிழகத்துக்கு புதிய கவர்னராக 77 வயதான பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
பன்வாரிலால் புரோகித் தற்போது அசாம் மாநில கவர்னராக பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட அவர் மேகாலயா மாநில கவர்னர் பதவியையும் கடந்த ஜனவரி முதல் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்.பன்வாரிலால் புரோகித் ஒரு வாரத்தில் தமிழக கவர்னராக பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார். தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் 6-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்வாரிலால் புரோஹித் வரும் 5-ம் தேதி பிற்பகல் சென்னை வருகிறார்.