பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குளறுபடிகள்
சமீபகாலமாக பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை பலமடங்கு கூட்டி, பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பி வருகிறது. இதன்மூலம் நிதி பற்றாக்குறையை மூடிமறைக்க முயற்சிக்கிறது.
2014-ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி விலகியபோது பெட்ரோலிய பொருட்களில் இருந்து மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூ.99 ஆயிரத்து 184 கோடி. ஆனால் பலமுறை கலால் வரியை உயர்த்தியதால் மத்திய பா.ஜ.க. அரசின் வரி வருவாய் தற்போது ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 691 கோடியாக உயர்ந்திருக்கிறது.
திரும்ப பெற வேண்டும்
இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய விலை உயர்வுகள் மக்கள் விரோத நடவடிக்கை என்று குற்றம் சாட்டுவதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்?. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி உயரும், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். இதனால் ஏற்படுகிற தொடர் பாதிப்புகளினால் பல்வேறு சுமைகளை மக்கள் ஏற்க வேண்டியிருக்கும்.
நாட்டு மக்கள் மீது நரேந்திரமோடி அரசுக்கு கடுகளவாவது அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அப்படி திரும்பப்பெறவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.