சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் சிக்கியது
மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய தனியார் நிறுவன தற்காலிக ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவன தற்காலிக ஒப்பந்த ஊழியரான கரிகாலன் (வயது 29) என்பவர் கையில் ஒரு பையுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த மத்திய தொழில் படையினர், அவரை பிடித்து விசாரித்தனர். அவர், “மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் தனது உறவினரான முதியவர் ஒருவர் வந்தார். அவரால் பையை தூக்கிச் செல்ல முடியாததால் நான் கொண்டு செல்கிறேன்” என்றார்.
3 கிலோ தங்கம் சிக்கியது
சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் தலா 1 கிலோ எடை கொண்ட 3 தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.
மஸ்கட்டில் இருந்து அந்த தங்கத்தை விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த பயணி ஒருவர், விமான நிலையத்தில் அதிகாரிகளின் கெடுபிடியில் இருந்த தப்பிக்க அந்த தங்கத்தை கரிகாலனிடம் கொடுத்து விமான நிலையத்துக்கு வெளியே வந்து கொடுத்தால் அதற்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதால் அந்த பையை வாங்கிக்கொண்டு விமான நிலையத்தின் வெளியே நிற்கும் அந்த பயணியிடம் கொடுக்க முயன்றது தெரிந்தது.
இதையடுத்து கரிகாலனை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான கரிகாலன் மற்றும் பறிமுதலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கண்காணிப்பு கேமரா
பின்னர் விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த பயணியை பிடிக்க அதிகாரிகள் விமான நிலையம் வெளியே சென்று பார்த்தனர். ஆனால் கரிகாலன் பிடிபட்டதை அறிந்த அவர், அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கரிகாலனிடம் தங்க கட்டிகள் இருந்த பையை கொடுத்த பயணியின் உருவம் பதிவாகி உள்ளதா? என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.