கட்சிக்கே தலைவராக முடியாதவர் மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு
கட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் கனவில் மிதக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தடைகளை தகர்த்தெறிவோம்
ஒரு சிலர் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாது என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. ஆகவே, முதல் வெற்றி நமக்கு இன்றைக்கு கிடைத்திருக்கின்றது. பிரிந்த இயக்கம் ஒன்றாக இணைந்த வரலாறு இந்தியாவிலேயே ஒரு சில இயக்கங்களுக்குத்தான் பொருந்தும். இந்த கட்சிக்கு வரலாறு இருக்கின்றது. எவராக இருந்தாலும், கட்சியை உடைக்கவோ, மாற்றவோ முடியாது.
ஜெயலலிதா மறைந்து விட்டார். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். தி.மு.க. எவ்வளவோ பிரச்சினையை தூண்டியது. அதையெல்லாம் உங்களுடைய ஆதரவினால் அதை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். ஆகவே, பிரிந்த இயக்கம் இன்றைக்கு இந்த பொதுக்குழுவின் மூலமாக இணைந்திருக்கின்றது.
எதிர்க்கட்சியினர் எவ்வளவு பாய்ந்தாலும் சரி, எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும் சரி, இடர்பாடுகள் கொடுத்தாலும் சரி, உங்கள் துணையோடு அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, உடைத்தெறிந்து, ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றியே தீருவோம்.
துரோகி
இன்றைக்கு ஆட்சியை கலைக்க நினைப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். டிடிவி.தினகரன், யார் இவர்? 10 ஆண்டு காலம் எங்கே போனார்? வன வாசம் போயிருந்தார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இந்த டி.டி.வி.தினகரன்.
இன்றைக்கு நம்மைப் பார்த்து துரோகி என்கிறார். துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. ஜெயலலிதாவின் செல்வாக்கின் காரணமாக இந்த கட்சியும், ஆட்சியும் உயர்ந்து நிற்கின்றது. இவர்களைப்போல துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தை கொடுத்தார்கள். ஜெயலலிதா அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி சென்றார்.
ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்கின்றார்களே, ஏன் 10 ஆண்டுகாலம் நீக்கிவைத்தார்கள் இவர்களை, எண்ணிப்பாருங்கள். ஜெயலலிதாவால் இந்த கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது என்று நீக்கி வைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றார்கள். எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர்கள், இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்கின்றார்கள். என்ன தகுதி இருக் கின்றது. ஏற்கனவே திட்டமிட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தொண்டன் மீது கூட இவர் கள் கை வைக்க முடியாது.
ஸ்டாலின்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் எப்பொழுது பார்த்தாலும், மைக் கிடைத்துவிட்டால் போதும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது அவரின் உரையாக இருக்கும்.
என்னய்யா உனக்கு துரோகம் செய்தது இந்த ஆட்சி?. சொல்வார்களா?
மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கே போய் விட்டார். நாம் முதல்-அமைச்சராகி விடலாமே என்று எண்ணுகிறார். அவர் கட்சிக்கே தலைவராக முடியவில்லை, செயல் தலைவர் தான் ஆகியிருக்கிறார். பிறகு எங்கே அவர் முதல்- அமைச்சராக முடியும், அவரின் கட்சிக்கு முதலில் அவர் தலைவராகட்டும் அப்புறம் நினைத்துப் பார்க்கலாம். அவர் கண்ட கனவெல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினாா்.