ஆட்சியை காப்பாற்றுவதில் தான் இந்த அரசு முழுமையாக ஈடுபடுகிறது மு.க.ஸ்டாலின் பேட்டி
பரவி இருக்கின்ற டெங்கு காய்ச்சலை பற்றி கவலைப்படாமல் ஆட்சியை காப்பாற்றுவதில் தான் இந்த அரசு முழுமையாக ஈடுபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர், 101 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையையும், கண் குறைபாடுள்ள 25 பேருக்கு மூக்கு கண்ணாடிகளையும், புத்தாடைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆய்வு
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெற்று கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். 68-வது வார்டில் ஜெய்பீம் நகர் புதிய ரேஷன் கடை கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு இருக்கிறேன். தில்லை நகர் 4-வது குறுக்கு சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, ஜி.கே.எம் காலணி 27-வது தெருவில் இருக்கக்கூடிய மாநகராட்சி பள்ளிக்கு ரூ.14.74 லட்சம் செலவில் கழிப்பறை, ‘சம்ப்’ மற்றும் போர்வெல் பம்பு அமைக்கும் பணியையும் பார்வையிட்டேன்.
கொளத்தூர் தொகுதியின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.42 லட்சம் செலவில் கழிவுநீர் அகற்றும் வாகனம் (ஜெட்ராடிங் மெஷின்) உரிய அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் தெரிவித்து இருக்கிறேன். அவர்களும் அதை உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியை தந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதனைக்குரிய ஒன்று
அதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி:- தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதும், டெங்கு பாதிப்பும் ஏற்படுவது வழக்கமாகி இருக்கிறதே?
பதில்:- இந்த பிரச்சினைகளை அந்த துறையின் அமைச்சரும், அரசுப் பொறுப்பில் இருக்கும் முதல்-அமைச்சரும் தான் வேகப்படுத்தி, துரிதப்படுத்த வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ஆட்சியை எப்படி காப்பாற்றிக்கொள்வது, எந்தெந்த எம்.எல்.ஏக்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது, அவர்களை எப்படி பிடித்துக்கொண்டு வருவது போன்ற பணிகளில் மட்டும் தான் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இன்றைக்கு பரவி இருக்கின்ற டெங்கு காய்ச்சல் பற்றியோ அதனை தடுப்பது பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த குதிரைபேர அரசு இருப்பது வேதனைக்குரிய ஒன்று.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.