பஸ் நிலைய கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரணை
பஸ் நிலைய மேற்பகுதி இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
கோவை அருகே பஸ் நிலைய மேற்பகுதி இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 பேர் சாவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் 7–ந் தேதியன்று இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
ஒரு நபர் குழு விசாரணை
இதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தக்க விசாரணை மேற்கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காகவும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன்தீப் சிங் பேடியை ஒரு நபர் விசாரணைக் குழுவாக அரசு நியமித்துள்ளது.
இந்த விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.