தாலிக்கயிறு, அரைஞாண் கயிறுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் ஜி.எஸ்.டி. மன்ற கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்தில் தாலிக்கயிறு, அரைஞாண் கயிறுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. மன்ற கூட்டத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

Update: 2017-09-09 21:45 GMT
சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

9-ந்தேதியன்று (நேற்று) நடைபெற்ற 21-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்ற கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. அதில் மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை மாற்றியமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 40 பொருட்களுக்கு வரியை குறைப்பதற்கு மன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் மீண்டும் அழுத்தமாக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். அதன் விவரம் பின்வருமாறு:-

வறுகடலை, இட்லி, தோசை மாவு, வணிகச் சின்னம் இடப்பட்ட அல்லது இடப்படாத அனைத்து உணவுப் பொருட்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்கள் ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

ஜவுளி தொழில் தொடர்பான எந்திரங்களின் பாகங்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைத்திடவேண்டும். பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத வரிவிதிப்பு இந்த துறையை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதற்கான வரியை குறைக்க வேண்டும்.

மெழுகு தீப்பெட்டிகள் உள்பட கையினால் செய்யப்படும் அனைத்து தீப்பெட்டிகளுக்கும் விதிக்கப்படும் 5 சதவீத வரி, இதர தீப்பெட்டிகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் மற்றும் எந்திரம் கொண்டு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் என்று வேறுபடுத்தாமல் ஒரே சீராக 12 சதவீத வரியாக விதிக்கப்படவேண்டும்.

கடலை மிட்டாய் இனிப்பு வகை பண்டம் என்பதால் அதன் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். 20 லிட்டர் கேன்களில் விற்கப்படும் குடிதண்ணீருக்கு முழுவதுமாக விலக்களிக்க வேண்டும். மீன்பிடி கயிறுகள் மற்றும் வலைகள், கருவாடு, ஜவ்வரிசி மற்றும் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படும் அரிசி தவிடு ஆகியவற்றுக்கு வரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும்.

ஊறுகாய், சின்னமிடப்படாத சர்க்கரை மிட்டாய்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய நுன் ஊட்டச் சத்துகள், பம்புசெட்டுகள் ஆகியவற்றின் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

கிலோ 100 ரூபாய்க்கு மேல் விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 18 சதவீதம், கிலோ 100 ரூபாய்க்கு கீழ் விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 5 சதவீதம் என்று வேறுபடுத்தி வரி விதிக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பல பொருட்கள் மீதான வரி 5 சதவீதத்தில் மட்டுமே இருப்பதால், மீதமுள்ள சில பொருட்களுக்கும் வரியை அதே அளவுக்கு குறைக்க வேண்டும். தாய்மார்கள் மற்றும் பெண்களின் நலன் கருதி சானிடரி நாப்கின் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்கவேண்டும்.

500 சிசி எந்திர திறன் கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் மேல்வரி விதிக்க வேண்டும். மூக்கு கண்ணாடி மற்றும் அவற்றின் பாகங்கள் மீதான வரியை குறைக்கவேண்டும்.

கோரை பாய், வெள்ளி கொலுசு, மெட்டி மற்றும் அரைஞாண் கயிறு, தாலிக் கயிறு, பட்டினால் நெய்யப்பட்ட ஆடைகள், ஆயுள் காப்பீட்டு சேவைகளுக்கு வரி விலக்களிக்க வேண்டும். கேளிக்கை பூங்காக்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவற்றோடு, தமிழக வணிகர்கள் மற்றும் வணிக சங்கங்களிடமிருந்து வரப்பெற்ற மேலும் பல கோரிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் இணக்க முறையில் வரி செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குவதற்கான தேதியை நீட்டிப்பது, கைவினைப் பொருட்களை இடைமாநில விற்பனை செய்யும் நேர்வுகள், சில்லறை வேலை தொடர்பான இடைமாநில சேவைகள் வழங்கும் நேர்வுகள் ஆகியவற்றில் பதிவுச்சான்று பெறுவதிலிருந்து விலக்களித்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

வருமான வரி தாக்கல் செய்வதில், பணம் செலுத்துவதில், மாறுதல் கால வகைமுறைகள் குறித்து தாக்கல் செய்ய வேண்டிய விண்ணப்பங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு அவற்றை களைவதற்கான தீர்வும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்