தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமி வளைக்க முயற்சி

அ.தி.மு.க இரு அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மாற்று முகாமில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனர்.

Update: 2017-09-08 10:23 GMT
சென்னை,

ஜெயலலிதா  மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள சசிகலா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தொடக்கத்தில் அவருக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை. இதன் காரணமாக சசிகலாவால் மிக எளிதாக அ.தி. மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வர முடிந்தது.

அதன் பிறகு முதல்- அமைச்சர் பதவிக்கும் சசிகலா குறி வைத்து காய்களை நகர்த்தியதால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிலர் கொதித்தெழுந்து தனி அணியாக சென்றனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் சசிகலாவின் ஆசை நிராசையாகிக் போனது. இதனால் ஜெயிலுக்கு போகும் முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் ஆக்கி விட்டும் சென்றார்.

இதையடுத்து டி.டி.வி. தினகரன் அ.தி.முக.வில் உள்ள அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். இதை விரும்பாத முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த அமைச்சர்களும், ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை தங்களுடன் சேர்த்துக் கொண்டு டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டி விட்டனர். இதன் காரணமாக டி.டி. வி.தினகரன் ஓரணியாகவும், அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓரணியாகவும் திரண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி  பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் வகுத்துள்ள திட்டத்துக்கு 21 எம்.எல்-.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 21 எம்.எல்.ஏ.க்களையும் கவர்னரிடம்  அழைத்து சென்ற தினகரன், முதல் அமைச்சர்   எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தனித்தனியாக  கடிதம் கொடுக்க வைத்தார்.

இதனால்  எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மெஜாரிட்டி இல்லாததால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

அ.தி.மு.க.வில் மொத்தம் 134 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 111 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாகவும், 21 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 117 எம்.எல். ஏ.க்கள் தேவை என்பதால் எடப்பாடி அணிக்கு மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இரு அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மாற்று முகாமில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனர். நேற்று தினகரன் ஆதரவாளராக இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி அதிர்ச்சி அளித்தார்.
அதே சமயம் கருணாஸ் எம்.எல்.ஏ. தினகரன் ஆதரவாளராக மாறினார்.

டி.டி.வி.தினகரன் தரப்பினர், “எங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.எல். ஏ.க்கள் ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடி அணியில் உள்ளனர். நேரம் வரும் போது அவர்கள் வெளியில் வருவார்கள்” என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். 10 முதல் 20 எம்.எல். ஏ.க்கள் வரை ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாக தினகரன் தரப்பினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தினகரனிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் எங்களை ஆதரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக இந்த பக்கம் வந்து விடுவார்கள் என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள டி.டி.வி.தினகரன், இனி ஜக்கையன் போல வேறு எந்த எம்.எல்.ஏ.வும் ஓடி விடக் கூடாது என்பதற்காக தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் மைசூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் கவர்னரை எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது அவர் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட உத்தரவிட வேண்டும் என்று 
வலியுறுத்துவார். அதை ஏற்று கவர்னர் உத்தரவிட்டு விட்டால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சவாலான  நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும்.

அதை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தயாராகி வருகிறார்கள். டி.டி. வி. தினகரனிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 முதல் 10 பேரை இழுக்கும் முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணிகள் மிக, மிக ரகசியமாக நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு இளைஞர் பேரவை  எம்.எல்.ஏ. தனியரசு ஆதரவு அளிப்பார்  என்று தெரிய வந்துள்ளது. இதனால் எடப்பாடிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கும். இன்னும் 5 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மெஜாரிட்டியை நிரூபித்து விடலாம்.

இதை கருத்தில் கொண்டு தினகரனிடம் உள்ள தென் மாவட்ட எம்.எல்.ஏ.க்களிடம் ஓ.பி.எஸ். அணியினர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். தினகரனிடமிருந்து சில குறிப்பிட்ட எம்.எல். ஏ.க்களை இழுத்து வரும் பொறுப்பை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சில எம்.எல்.ஏ.க்களை  அழைத்து வரும் பொறுப்பு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசிய படி உள்ளனர். அந்த வலையில் தனது ஆதரவாளர்கள் விழுந்து விடக்கூடாது என்று தினகரனும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளார். காங்கிரசில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களிடமும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) தமது முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எனவே இன்னும் 5 நாட்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகுமலையில்  இருந்து சென்னை வந்து சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டியதுள்ளது.

அந்த சமயத்தில் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் யார்-யார் எந்த பக்கம் சாய்வார்கள் என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கவர்னர் அறிவிக்க போகும் முடிவை பொருத்து இந்த பரபரப்பு அதிகரிக்குமா? அல்லது அடங்குமா? என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்