டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 14-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் 14-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

Update: 2017-09-07 22:45 GMT
சென்னை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கவர்னரைச் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று 19 பேரும் மனு கொடுத்தனர்.

இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக உள்ளது என்று 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ந் தேதிக்குள் பதில்அளிக்க வேண்டும் என்றும், 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சட்டசபை செயலாளரை 5-ந் தேதியன்று 19 எம்.எல்.ஏ.க்களில் சிலர் வந்து சந்தித்தனர். சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராவது மற்றும் நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு 15 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

15 நாட்கள் கால அவகாசம் கேட்டு 19 பேரும் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ப.தனபால் தற்போது நிராகரித்துவிட்டார். இப்போது சபாநாயகர் புதிய நோட்டீஸ் ஒன்றை 19 பேருக்கும் பிறப்பித்துள்ளார். அதில், 14-ந் தேதியன்று தனது முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். அதன்படி, எம்.எல்.ஏ.க்கள் கோரிய 15 நாட்கள் கால அவகாசம், 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக இருந்த ஜக்கையன், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து சபாநாயகர் ப.தனபாலை நேற்று சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்