தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-09-05 19:00 GMT
சென்னை

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம், லோகையா காலனியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தமிழிசை சவுந்தரராஜன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசும் மர்மநபர் அவரை ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதோடு, இதுபற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்தார்.

இந்த கொலை மிரட்டல் குறித்து தமிழிசை சவுந்தரராஜனின் வக்கீல் தங்கமணி விருகம்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். கொலை மிரட்டல் விடுக்கும் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் பயன்படுத்தும் எண்கள் 3 இலக்க எண்களாக உள்ளது.

ஆகவே இது செல்போன் எண் கிடையாது. யாரும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் மூலம் பேசி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதற்கு முன்பு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் அந்த எண்ணை வைத்து விசாரித்தபோது துபாயில் இருந்து பேசி மிரட்டல் விடுத்தது போல் தெரியவந்தது.

தற்போதும் அதே எண்ணில் இருந்துதான் மிரட்டல் வந்துள்ளதா? கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்