போலீஸ் உஷார்; மெரினா உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடங்கள் கண்காணிப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா.
சென்னை,
இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகளே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. 35 மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் பொது மக்களே ஈடுபட்டனர்.
75 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக திரண்டது போல மெரினாவில் மாணவர்கள் கூடப்போவதாக வாட்ஸ் - அப்பில் தகவல் பரவி வருகிறது. இதனால் மெரினாவில் நேற்று காலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாவட்ட தலைநகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மாணவர்கள், மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அதுபோல யாரும் திரண்டு விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்கள். அதுபோன்ற இடங்களில் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கண்காணிப்பு வளையத்தின் கீழ் உள்ளது.