இதர பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கைவிட வேண்டும் மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

இதர பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-08-31 22:45 GMT
சென்னை,

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இதர பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 12-ந் தேதி நான் அனுப்பிய கடிதத்துக்கு உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி. அனைத்து இந்திய மொழிகளையும் உயர்த்துவதுதான் மத்திய அரசின் கொள்கை என்று நீங்கள் அளித்துள்ள விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு, காஞ்சீபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்பளித்துள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு ரூ.24 கோடியை மத்திய அரசு அனுமதித்ததோடு, அங்கு கட்டிடப்பணிகளை மத்திய பொதுப்பணித்துறை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்த சூழ்நிலையில், அந்த நிறுவனத்தை தஞ்சாவூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடனோ அல்லது வேறு ஏதாவது பல்கலைக்கழகத்துடனோ இணைப்பதற்கான நடவடிக்கைகளை நீங்கள் கைவிடவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தை காப்பாற்றவேண்டும். செம்மொழி தமிழில் கற்று ஆய்வு செய்வதற்கான மத்திய நிறுவனமாக அந்த நிறுவனம் மேம்பாடு அடையும் வகையில் அதை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்