ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் எழுதிய சுயசரிதை நூல்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ரத்தினவேல் பாண்டியன், ‘என் வாழ்க்கை பயணம்– ஏ டூ இசட்’ என்ற சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.;
சென்னை,
டெல்லியில் இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் இந்த நூலை வெளியிட முதல் பிரதியை மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜி பெற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி இந்த விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
டி.எஸ்.தாகூர் பேசும்போது, ‘89 வயதான நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியனின் இந்த சுயசரிதை நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய அவர், மிகச்சிறந்த மாமனிதர்’ என்று புகழாரம் சூட்டினார். நீதிபதி பானுமதி பேசும்போது, ‘ரத்தினவேல் பாண்டியனின் துணிவும், உறுதிப்பாடும், அவருடைய அனைத்து தீர்ப்புகளிலும் எதிரொலித்தது. தோல்விகளையும் படிக்கற்களாக அமைத்துக்கொண்ட ரத்தினவேல் பாண்டியன் மிக உயர்ந்த மனிதர் என்றும், இந்த நூல் இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் சிறந்த ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கிறது’ என்றும் கூறினார்.
விழாவில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முன்னாள், இன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியனின் பேரன் வக்கீல் ரத்தினவேல் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அவர் மகன் கந்தசாமி நன்றி கூறினார்.