முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2017-08-25 23:52 IST
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், அவருக்கு மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்கான பரிசாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரி அல்ல. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுவதற்காகவே இப்படி ஒரு அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இத்தகைய நியமனத்தால் பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக சபீதா இருந்தபோது ஏற்பட்ட சீரழிவைவிட இன்னும் மோசமான சீரழிவுகளை அத்துறை சந்திக்கும்.

பள்ளிக்கல்வித் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து பா.ம.க. அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை முன்வைத்தபோது, அதுகுறித்து விவாதிக்கத் தயாரா? என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்தார். அதை ஏற்ற பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பள்ளிக்கல்வித் துறை ஊழல்கள் மட்டுமின்றி, அத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று அறிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு விவாதத்திற்கு ஏற்பாடு செய்து காத்திருந்த போதிலும், அதில் பங்கேற்பதற்கு வராமல் ஓடி ஒளிந்த அவர், இப்போது உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைப்பதில் மட்டும் தனது வீரத்தைக் காட்டியிருக்கிறார். தங்களின் நோக்கம் சீர்திருத்தம் அல்ல, ஊழல் தான் என்பதை அ.தி.மு.க. அரசு நிரூபித்திருக்கிறது.

தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவை கல்வித்துறை சீர்திருத்தங்கள் தான். எனவே, பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்