முரசொலி பவள விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்கள், சினிமா கலைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

முரசொலி பவள விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்கள், சினிமா கலைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Update: 2017-08-12 21:30 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்துள்ள முரசொலி ஏடு, கருணாநிதியின் மூத்த பிள்ளையாக அவர் கரங்களில் அன்று முதல் இன்று வரை தவழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மூத்த பிள்ளையின் பவள விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்திட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும், எதிர்பார்த்தபடியே நடந்தேறி, வெற்றி பெற்றிருப்பதில் மனம் மகிழ்ந்து, அதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க வேண்டியக் கடமை உள்ளதை உணர்கிறேன். தி.மு.க. செயல் தலைவர் என்ற முறையிலும், முரசொலி அறக்கட்டளையின் சார்பிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் என்னுடைய நன்றியை அனைவருக்கும் உரித்தாக்குகிறேன்.

பவள விழா மலரை அரிய வரலாற்று ஆவணமாக வடிவமைக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும், அவருக்கு ஒத்துழைப்பாக இருந்த முத்து வாவாசி, எஸ்.ராமு, அரசு ஆர்ட்ஸ் கோபி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முரசொலி பவள விழாவின் முதல் நிகழ்வாக, 10-ந்தேதி காட்சி அரங்கத் திறப்புவிழா நடைபெற்றது.

தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில், இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார். முரசொலி வளாகத்தில் பழைய முரசொலி அலுவலகங்களின் முகப்புடன் அமைந்திருந்த காட்சி அரங்கத்தின் உள்ளும் புறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த வரலாற்று நிகழ்வுகளை கண்டு எல்லோருமே அதிசயித்துவிட்டனர். கி.வீரமணி, திறந்து வைத்த இந்து என்.ராம் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்தரங்கத்தில் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல, அது இந்திய ஒன்றியத்தின் தவிர்க்க முடியாத கோட்பாடு என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தன்னுடைய தொடர்ச்சியான படப்பிடிப்பு -திரைப்பணிகளுக்கிடையிலும் தலைவர் கருணாநிதி மீதுள்ள மாறாத அன்பினால் பவள விழாவுக்கு வருகை தந்து, இறுதிவரை நிகழ்ச்சிகளை ரசித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறப்பு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து என்.ராம், தினத்தந்தி தலைமை பொது மேலாளர் சந்திரன், ஆனந்த விகடன் சீனிவாசன், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் வருகை தந்த தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் இணை ஆசிரியர் ரமேஷ், டெக்கான் கிரானிக்கள் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர் அருண் ராம், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார், நக்கீரன் கோபால் என அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எல்லோரும் குவிந்ததால் கலைவாணர் அரங்கம் கடல்போல காட்சியளித்தது. இதன்காரணமாக ஏற்பட்ட இடமின்மைக்கும் இன்னும் சில இடர்பாடுகளுக்கும் முரசொலி அறங்காவலர் என்ற முறையில் என் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டியது கடமையாகிறது.

பவள விழா இரண்டு நாட்களில் முடிவடையக்கூடாது மேலும் தொடர வேண்டும் என்கிற இயற்கையின் விருப்பத்திற்கேற்ப, பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மழையையும் பொருட்படுத்தாது விழாவுக்கு வருகை தந்திருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மகிழ்ச்சி மாமழையை நெஞ்சில் பொழிய வைத்த முரசொலி பவள விழா வெற்றிக்குத் துணைநின்ற கழகத்தின் ஆணிவேர்களாம் தலைவர் கருணாநிதியின் தொண்டர்களுக்கு என்றென்றும் நன்றிக்குரியவனாவேன். ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ந் தேதி பல்வேறு கட்சிகளின் பங்கேற்புடன் கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகச் சிறப்பாக நடைபெறும். நமது ஒற்றுமையும், வலிமையும் முரசொலித்து புதிய வரலாற்றைப் படைப்போம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்