காகித ஆலைகளுக்கான கச்சா பொருளை உருவாக்க மாற்று முயற்சிகள் தேவை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
காகித ஆலைகளுக்கு தேவையான கச்சா பொருளை உருவாக்க மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை,
காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 56-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சாம்ஜி காரியா தலைமை தாங்கினார். மத்திய வர்த்தக துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தார்.
காகித வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைவதற்காக புதிதாக சங்கத்தின் பெயரில் ஒரு செயலியை (செல்போன் ஆப்) மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காகித தொழில் துறை நீடித்த வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் காகித தொழிற்சாலைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எந்த அளவு முயற்சிக்கிறதோ, அதைவிட சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதையும், அதனுடைய மேம்பாட்டையும் நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
காகித ஆலைகளுக்கு தேவை யான கச்சாப்பொருளான மரக்கூழ் தயாரிக்க பயன்படும் மரங்களை வளர்ப்பதற்கு தரிசு நிலங்களை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காகித ஆலைகளுக்கு தேவையான கச்சாப்பொருளை உருவாக்க மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆற்றுப்படுகை மற்றும் சதுப்புநிலங்களில் காகித ஆலைகளுக்கு தேவையான மரங்களை நடுவது குறித்து ஆலோசித்த பின்னர், மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடலாம். அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.
பயிர் செய்ய முடியாத நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளிடம் பேசி அந்த நிலங்களில் காகித கூழ் தயாரிக்கும் மரங்களை நடலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கும் போதிய வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இறக்குமதியும் நியாயமான முறையில் இருக்க வேண்டும். காகிதங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மின்னணு கருவிகளையும், மின்னணு ஊடகங்களையும் காகித ஆலை தொழிலுக்கு சவாலாகவும், போட்டியாகவும் நினைக்க வேண்டாம். இன்றைய காலகட்டத்தில் காகித பயன்பாடு மட்டுமின்றி மின்னணு பயன்பாடும் தேவைப்படுகிறது.
காகித ஆலை தொழிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் காகித மறுசுழற்சி மூலம் பல்வேறு தரப்பினரும் பயனடைவது போன்று, நாமும் மறுசுழற்சி முறையை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.