நாட்டில் முதல் முறையாக சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் பங்கேற்கிறார்கள்
நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை,
நாட்டில் முதல்முறையாக சுதந்திர தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் வெளிமாநில போலீசார் கலந்துகொள்ள உள்ளனர். சென்னை கோட்டையில் நடைபெறும் அணி வகுப்பில் ஆந்திர போலீசார் பங்கேற்கிறார்கள்.
இந்திய சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார்.
மாநிலங்களில் அந்த மாநில முதல்-அமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளனர். சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வெளிமாநில போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதன்படி சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆந்திர மாநில டி.எஸ்.பி., தலைமையில் 79 போலீசார் சென்னை வந்துள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை டி.எஸ்.பி. தலைமையில் 2 படை பிரிவு போலீசார், ஆந்திராவில் நடைபெறும் சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளனர்.
இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கூறும்போது, ‘நல்லிணக்க அடிப்படையில் அண்டை மாநிலங்களை சேர்ந்த போலீசார் மற்ற மாநிலங்களில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.
சென்னை கோட்டையில் தமிழகத்தை சேர்ந்த 5 படை போலீசார், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர் படையினர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அவர்களுடன் ஆந்திராவை சேர்ந்த போலீசாரும் பங்கேற்பார்கள்.
சென்னை கோட்டை அருகே நேற்று நடைபெற சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஆந்திர போலீசார் பங்கேற்றனர்.
கேரளாவை சேர்ந்த 2 சிறப்பு படை போலீசார் கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 சிறப்பு படை போலீசார் கேரளாவுக்கும் சென்றுள்ளனர்.