அதிமுகவின் நன்மைக்காக எதையும் செய்வேன்: டிடிவி தினகரன் பேட்டி
அதிமுகவின் நன்மைக்காக எதையும் துணிச்சலோடு செய்வேன் என்று டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் நிரந்தரமாக நீக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், தஞ்சாவூரில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு எங்களை அழைக்கவில்லை. எங்கள் சார்பாக ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் கலந்து கொண்டுள்ளனர். கட்சியும் ஆட்சியும் அதிமுகவிடம் இருக்கிறதே தவிர ஒரு நபர் அல்லது அணியிடம் இல்லை. தேர்தல் ஆணைய உத்தரவை மீறி நேற்று தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள் பதவி பறிபோகும். அதிமுகவின் நலன் கருதி எதையும் துணிச்சலோடு செய்வேன். திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து சசிகலா முடிவு செய்வார். பொறுப்பற்ற முறையில் யாரோ சிலர் பேசுவதற்கு என்னால் பதில் கூற முடியாது.
யூகங்கள் தகவல்கள் என பரவும் செய்திகளுக்கு பதிலளிக்க முடியாது. மேலூரில் நடைபெறும் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி தராவிட்டாலும் நிச்சயம் கூட்டம் நடைபெறும். சில நண்பர்கள் சுயநலம், பயம் காரணமாக சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.
5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா என்பதை அமைச்சர்கள் மற்றும் முதல்வரிடம் கேட்க வேண்டும். திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அந்த சமயத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவை காக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். தேவைப்படும் நேரத்தில், தேவையான நபர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்” இவ்வாறு அவர் கூறினார்.