இந்தி பயன்படுத்தப்படவில்லை: சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழுக்கு முக்கியத்துவம்
பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும், இந்தி பயன்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை,
பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் இந்திய ரெயில்வேயில் 3 மொழி (மும்மொழி) கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பேசப்படும் இந்தி, தொடர்பு மொழியான ஆங்கிலம், மற்றும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ற வட்டார மொழிகள் பயன்படுத்தப்படுகிறது.ரெயில் டிக்கெட்டுகள், ஊர் பெயர் பலகைகள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் தகவல்களும் இந்த 3 மொழிகளிலும் தெரிவிக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வழங்கப்படும் சீசன் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டு உள்ளன. வட்டார மொழியில் தகவல்கள் இடம் பெறவில்லை.
இந்திய ரெயில்வே மட்டும் அல்லாது கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையிலும் 3 மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலில் பயன்படுத்தப்படும் 3 மொழி கொள்கைகளில் இந்தி தேவை இல்லை, கன்னடம், ஆங்கிலம் மட்டும் போதும் என்று அங்குள்ளவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ஆனால் சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் எங்கும் இந்தி மொழியை காண முடியவில்லை. குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் நிலைய பெயர் பலகைகள் மற்றும் தகவல்கள், ஒலிபெருக்கிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு வழங்கும் ‘டிராவல் கார்டு’ என்னும் பயண அட்டையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டிக்கெட்டுகளை தமிழில் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
இந்தி பேசும் மண்டலங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தான் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தை பொறுத்தவரையில் இந்தி பயன்படுத்தப்படவில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. பயண அட்டையிலும் இந்த 2 மொழிகள் பயன்படுத்தப்படுகிறது.
விமான நிலையம் போன்ற இடங்களில் பிறமாநிலத்தவரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யவருவதால் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில்நிலையங்களில் அனைத்து இடங்களிலும் வட்டார மொழியான தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அளிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.