‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்து வருகிறது.

Update: 2017-08-04 19:38 GMT
சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்து வருகிறது. கல்வியில் அரசியல் பார்க்காமல், அனைத்து தரப்பு மக்கள் சார்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் தமிழக அரசும் சேர்ந்து சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் பயன் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, தமிழக அரசு ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெறுவதற்காக, அனைத்து அரசியல் கட்சிகள் கொண்ட ஒரு கூட்டத்தை அவசரமாக கூட்டி, அனைவரின் ஒருமித்த கருத்தைப் பெற்று, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு பிரதமரை நேரில் சந்தித்து, ‘நீட்’ தேர்வுக்கு விரைவில் விலக்கு பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும்.

மேலும், தமிழக அரசு மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து, ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற்று, தடை ஏதும் ஏற்படாத வகையில் மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு உதவிட வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்