பால் கலப்படம் விவகாரம்: நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை ஐகோர்ட்டில் அமைச்சரின் வக்கீல் வாதம்

எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டவில்லை என்று ஐகோர்ட்டில் அவரது வக்கீல் வாதம் செய்தார்.

Update: 2017-08-04 21:45 GMT
சென்னை,

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில், புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுவதாக, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

அதில், தங்கள் நிறுவனத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சருக்கு தடை விதிக்கவேண்டும். அவதூறாக பேசிய ராஜேந்திரபாலாஜி, தங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பால் நிறுவனங்கள் சார்பில் வக்கீல் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ‘பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது என்பதற்காக பிறருடைய வாழும் உரிமைக்கு எதிராக அமைச்சர் கருத்து தெரிவிக்க முடியாது. தனியார் பாலில் கலப்படம் உள்ளது என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், பாலில் கலப்படம் செய்ததாக தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்யவில்லை. மேலும், இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது, தனியார் நிறுவனத்தின் பால் பாக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு, இந்த பாலில் கலப்படம் உள்ளது என்று அமைச்சரின் வக்கீல், டி.வி.சேனல்களுக்கு பேட்டி அளிக்கிறார். இந்த செயல், இந்த ஐகோர்ட்டை அவமதிக்கும் செயல்’ என்று வாதிட்டார்.

பின்னர், அமைச்சர் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு அமைச்சர் குற்றம் சாட்டவில்லை. சமுதாயத்தில் பொறுப்புள்ள ஒரு மனிதர் என்ற ரீதியில் அவர் மக்களுக்கு பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஆனால், மனுதாரர்கள்தான், தாங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இல்லை என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர். அவசர அவசரமாக இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஒரு நபரையோ, ஒரு நிறுவனத்தையோ குறிப்பிட்டு கருத்து சொன்னால் தான், அது அவதூறாக கருத முடியும். ஆனால், அமைச்சர் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.

மேலும், பால் கலப்படம் குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கூட, உணவு பாதுகாப்பு என்பது தேசத்தின் பாதுகாப்பு என்று கூறியுள்ளது. அதன்படி தான் அமைச்சர், கலப்படத்துக்கு எதிராக மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்று அமைச்சர் தரப்பு வக்கீல் தன்னுடைய வாதத்தை தொடர உள்ளார். 

மேலும் செய்திகள்