தமிழகமே வறட்சி நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் உயர்த்தியது சரியா? ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தியது சரியா? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2017-08-04 21:45 GMT
மதுரை,

‘வறட்சியால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தியது சரியா என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறோம்’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் 19-ந்தேதி அறிவிப்பு வெளியானது. அதாவது சம்பளம் மற்றும் இதர படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர். வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், மின் வாரியம் உள்ளிட்ட பல அரசுத்துறைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மேலும் தமிழகம் தற்பொழுது ரூ.45 ஆயிரத்து 119 கோடி கடன் சுமையில் உள்ளது.

இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எனவே சம்பள உயர்வு ஆணையை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் தார்மீக அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் சட்டப்பூர்வமாக கோர்ட்டை அணுகவில்லை. எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதில் நீதித்துறை தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது தேவையா என்று சட்டசபையில் எதிர்க்கட்சிகளே கேள்வி எழுப்பியுள்ளன. விவசாயிகள் தற்கொலை, வறட்சியால் பஞ்சம், பசி, பட்டினி என தமிழகத்தின் நிலை உள்ளபோது இது தேவையா என மனுதாரர் தனது மனுவில் கேட்டுள்ளார்.

அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது. ஆனால் அந்த முடிவு சட்டப்பூர்வமானதா என ஆய்வு செய்யலாம். இந்த விஷயத்தில் அரசு தான் நீதிமன்றம். அரசு எடுக்கும் கொள்கை முடிவின் மீது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கே உள்ளது.

பொதுவாக இந்த விஷயம் சரியா, தவறா என்று கோர்ட்டு கூற முடியாது. எம்.எல்.ஏ.க்களை மக்கள் தான் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் கேள்விக்கு எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். அது அவர்களின் பொறுப்பு. எந்த நேரத்தில் எது தேவை, எது தேவையில்லை என்று அவர்களுக்கு தெரியும். எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏழைகள் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு தாங்களே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். அதாவது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது சரியா என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.

இந்திய அரசியலமைப்பின்படி நிர்வாகம், நீதி, சட்டசபை எல்லாம் தனித்தனி துறைகள். நிர்வாகத்தின் முடிவுக்கு சட்ட சபை ஒப்புதல் அளிக்கலாம். அது சட்டப்பூர்வமாக சரியா என்பதை மட்டுமே நீதித்துறையால் பார்க்க முடியும்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்