ருசிகர சம்பவம் ‘பேஸ்புக்’ தோழிக்காக காரை திருடிய வாலிபர் கைது

ருசிகர சம்பவம் ‘பேஸ்புக்’ தோழிக்காக தந்தையின் காரை திருடிய வாலிபர் கைது

Update: 2017-08-04 22:00 GMT
சென்னை,

‘பேஸ்புக்’ தோழிக்காக அவரது தந்தையின் காரை திருடி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட வாலிபர் பற்றி ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘பேஸ்புக்’ தோழி விலை உயர்ந்த செல்போன் வாங்க திட்டம் தீட்டி இந்த செயலில் நண்பரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 28)..இவரை நேற்று முன்தினம் சென்னை கோடம்பாக்கம் போலீசார், கார் திருட்டு வழக்கில் கைது செய்தனர். அவர் திருடிய காரை போலீசார் அவரது வீட்டில் வைத்து மீட்டனர்.

போலீஸ் விசாரணையில், சந்துரு ஒரு அப்பாவி என்று தெரியவந்தது. காரை திருடியது ஏன் என்பது பற்றி அவர் வெளியிட்ட ருசிகர தகவல், போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் வெளியிட்ட தகவல் வருமாறு:–

நான் ‘பேஸ்புக்’ மூலம் இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் நட்பாக இருந்தேன். அவரது தந்தை தொழில் அதிபர். இதனால் அவர் ஆடம்பரமாக செலவு செய்வார். இதற்கு அவரது பெற்றோர் கட்டுப்பாடு விதித்தனர். விலை உயர்ந்த ஆப்பிள் செல்போன் வாங்கித்தர அவரது தந்தை மறுத்து விட்டார்.

ஆனால் ஆப்பிள் செல்போனை எப்படியாவது வாங்கியே தீருவது என்பதில் இந்திரா உறுதியாக இருந்தார். இதற்கான பணத்துக்காக, அவரது தந்தையின் விலை உயர்ந்த காரை திருடி விற்று பணமாக்கி, அதன் மூலம் செல்போன் வாங்க திட்டமிட்டார். காரின் சாவியை என்னிடம் கொடுத்து, காரை திருடிச் செல்லும்படி கூறினார். நான் முதலில் பயந்தேன்.

போலீசில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று இந்திராவிடம் கேட்டேன். போலீஸ் பிரச்சினை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் தைரியம் சொன்னார்.

இதனால் தைரியத்துடன், இந்திரா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை, அவர் கொடுத்த சாவியை பயன்படுத்தி திருடிச்சென்று விட்டேன். காரை எனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தேன். காரை விற்று பணமாக்கும் பொறுப்பையும் இந்திரா என்னிடம் ஒப்படைத்தார்.

காரை விற்பதற்கு, எனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவர் மூலம் விலைபேசி வந்தேன். அதற்குள் இந்திராவின் தந்தை போலீசில் புகார் கொடுத்து, போலீசாரும் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருடச்சொன்ன இந்திரா தப்பி விட்டார். ஆனால் அவர் பேச்சை கேட்டு திருடிய சந்துரு போலீஸ் வழக்கில் சிக்கி தவித்த நிலையில் உள்ளார்.

மேலும் செய்திகள்