தமிழகத்தில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2017-08-02 22:15 GMT
சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தின் தெற்கு பகுதி முதல் வடக்கு பகுதி வரை காற்று மண்டலத்தின் கீழ் அடுக்குப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் 15 செ.மீ.மழை பெய்துள்ளது.

அது போல இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். இதே நிலை அடுத்து 3 நாட்களுக்கு இருக்கும். அதாவது இந்த வாரம் முழுவதும் நீடிக்கும். இந்தியாவில் வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையாத நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கம். அதுபோல வடமாநிலங்களில் தென் மேற்கு பருவமழை வலு குறைந்த காணப்படுவதால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது வரை மழை இயல்பாக பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணி வரை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

மதுராந்தகம் 15 செ.மீ., புள்ளம்பாடி, செங்கம் 13 செ.மீ., வாடிப்பட்டி 12 செ.மீ., சின்னகல்லாறு 11 செ.மீ., வேடச்சந்தூர், போளூர், கும்பகோணம், கலவை தலா 9 செ.மீ., வந்தவாசி, உத்திரமேரூர், ஆரணி, லால்குடி, பெரம்பலூர், முசிறி தலா 8 செ.மீ., வேலூர், கரூர், கேளம்பாக்கம் தலா 7 செ.மீ., துறையூர், மகாபலிபுரம், சத்யபாமா பல்கலைக்கழகம் தலா 6 செ.மீ., காவேரிபாக்கம், ஆம்பூர், கோபிசெட்டிப்பாளையம், செய்யாறு, திண்டிவனம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 125–க்கும் மேற்பட்ட இடங்களில் மழைபெய்துள்ளது.

மேலும் செய்திகள்