அ.தி.மு.க. விவகாரத்தில் பரபரப்பாக அரங்கேறிய சம்பவங்கள்

அ.தி.மு.க. விவகாரத்தில் நேற்று பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின.

Update: 2017-08-01 23:45 GMT
சென்னை,

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கு டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் கெடு வரும் 4-ந் தேதியுடன் முடிவுபெற இருக்கின்ற நிலையில், தற்போது அ.தி.மு.க.வின் 2 அணி நிர்வாகிகளும் இணைப்பு முயற்சியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

டி.டி.வி.தினகரன் நேற்று பேட்டி அளித்தபோது, அ.தி.மு.க.வை இயக்கும் நிலையில் தான் இருப்பதாகவும், 4-ந் தேதிக்கு பிறகு தனது திட்டத்தை வெளியிடுவதாகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் பரபரப்பாக தெரிவித்தார்.

அவர் பேட்டியளித்த சற்று நேரத்திலேயே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் 8 பேருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வமும் அடையாறில் உள்ள தனது இல்லத்தில், அணியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை, எடப்பாடி பழனிசாமி அணியினர் அவரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

முதலில், இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தது.

அப்படி அழைக்கும் பட்சத்தில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டால் பிரச்சினை எதுவும் ஏற்பட்டுவிடும் என்று கருதி, கடைசி நேரத்தில் எம்.எல்.ஏ.க்களை அழைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

இறுதியில், அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை மட்டுமே அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரனின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாநில நிர்வாகி என்ற அடிப்படையில் வந்திருந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத, எடப்பாடி பழனிசாமி அணியினர், வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்துவது குறித்தே ஆலோசனை மேற்கொண் டனர். மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் சில மாற்றங்கள் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், ஒவ்வொருவராக வெளியேற தொடங்கினர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விட்டு தளவாய்சுந்தரம் வெளியேறியதும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மட்டும் ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி அணியினரை பொறுத்தவரை, வரும் 5-ந் தேதி டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதை துளியும் விரும்பவில்லை. எனவே, அதற்கு வழிவைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

அதை அமைச்சர் ஜெயக்குமார் தனது பேட்டியின்போது இலைமறை காயாக தெரிவித்தார். அதாவது, “கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழிநடத்துவார்” என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது தெரிவித்தார்.

இதை வைத்து பார்க்கும்போது, டி.டி.வி.தினகரனை ஏற்றுக்கொள்வதில், எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தயாராக இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர்?

இந்த முடிவில் ஒத்தக்கருத்துடன் 2 அணி நிர்வாகிகளும் இருந்தாலும், ஆட்சி மற்றும் கட்சியில் பதவிகளை பெறுவதில் ஒத்தக்கருத்து ஏற்படாத நிலையே இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியில் துணை முதல்-அமைச்சர் பதவியும், கட்சியில் வழிநடத்தும் குழுவின் தலைவர் பதவியும் வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது அணியை சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், இந்த நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. அவர்கள், கட்சி தொண்டர்கள் மத்தியில் தங்களுக்கே செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும், அதனால் முதல்-அமைச்சர் பொறுப்பை கொடுத்தால் தான் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கட்சியிலும் பொதுச் செயலாளர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனால், பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ‘இரட்டை இலை’ யாருக்கு சொந்தம் என்பதை இன்னும் அறிவிக்காத நிலையில், சின்னம் நமக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இருக்கின்றனர். சின்னம் கிடைத்துவிட்டால், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுடன் வந்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், தேர்தல் ஆணையம் தனது முடிவை எப்போது அறிவிக்கும் என்றே தெரியவில்லை. அதற்குள் டி.டி.வி.தினகரனும் கட்சி நடவடிக்கையில் இறங்கினால், பிரச்சினை மேற்கொண்டு பெரிதாகும் என்றே தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில், ‘திரிசங்கு’ நிலையிலேயே அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விஷயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்