சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி : வைரலாகும் கேலி சித்திர வீடியோ

சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி கொடுக்கபட்டதாக தகவல் வெளியானது இதைதொடர்ந்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் கேலி சித்திர வீடியோ வெளியிட்டு உள்ளது.

Update: 2017-07-27 08:51 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக 2 அறிக்கைகளையும் அவர் தாக்கல் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா மற்றும் சில சிறை அதிகாரிகளை கர்நாடக அரசு கூண்டோடு மாற்றியது.

சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க கர்நாடக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு  உள்ளது.

 இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் தனது 'So Sorry Politoon'  அரசியல் நையாண்டி கார்டூன் வரிசையில் சசிகலாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் பண அதிகார பலம்  எது வரை பாயும் என கேலி செய்து  புதிய பாலிடூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு, பலமுறை பகிரப்பட்டு தொடர்ந்து  வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்