கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் நாளை (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட உள்ளது.

Update: 2017-07-14 00:00 GMT
சென்னை,

சென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

ஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.

சென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ஒரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.

மேலும் செய்திகள்