‘வந்தே மாதரம்’ வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் விளக்கம்

‘வந்தே மாதரம்’ என்ற தேசபக்தி பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடலாகும் என்று ஐகோர்ட்டில், தமிழக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.

Update: 2017-07-13 22:15 GMT
சென்னை,

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வில், ‘வந்தே மாதரம்’ என்ற தேசபக்தி பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, ‘வங்கமொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம்’ என்ற 4 விடைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த தேர்வில் கலந்துகொண்ட வீரமணி என்பவர், இந்த கேள்விக்கு வங்கமொழி என்று பதிலளித்து இருந்தார். ஆனால், இது தவறான பதில் என்று கூறி அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வீரமணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், இந்த பாடல் குறித்த விவரம் தெரிந்த வக்கீல்களும், பொதுமக்களும் அதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமார சாமி ஆஜராகி, ‘வந்தே மாதரம் என்ற தேசபக்தி பாடல், வங்கமொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடலாகும்’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும், மனுதாரருக்கு இந்த கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டாலும், அவர் தேர்ச்சியடைய மாட்டார் என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார். அப்போது வக்கீல் ஏ.எஸ்.பிலால் என்பவர், வந்தே மாதரம் பாடல் குறித்த சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘1881-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தமத்’ எனும் வங்காள நாவலில் தான் வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டிருந்தது. இந்த பாடலை வங்க மொழியில் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார். சமஸ்கிருத மொழி மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டால், சமஸ்கிருத வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். ஆனால், சமஸ்கிருத மொழியில் இந்த பாடலை அவர் எழுதவில்லை. வங்க மொழியில் தான் எழுதினார்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை 17-ந்தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்