சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை நடத்துகிறது.
சென்னை,
விழாவில் எம்.ஜி.ஆர். உடன் பணியாற்றிய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து ‘இதயக்கனி’ மாத இதழின் ஆசிரியர் எஸ்.விஜயன் கூறியதாவது:–உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் மனம் கவர்ந்த ஈடு, இணையற்ற மனித நேயரும், மாமனிதருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், நூற்றாண்டு விழாவினை சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்துடன் (மனிதநேய மையம்), இதயக்கனி மாத இதழ் இணைந்து மிகவும் பிரமாண்டமாக நடத்த உள்ளோம்.
எம்.ஜி.ஆர். உடன் நடித்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விழாவுக்கு அழைத்து, அறிமுகம் செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். விழாவின் முத்தாய்ப்பாக, எம்.ஜி.ஆர். வெளியிட்ட அ.தி.மு.க.வின் கொள்கையான ‘அண்ணாயிசம்’ என்ற புத்தகத்தின் மறுபதிப்பும் வெளியிடப்படுகிறது.எம்.ஜி.ஆர். புகழ்பாடும் நூற்றாண்டு விழா, அவரை இன்னமும் மறக்க முடியாமல் நினைத்து உருகும், அந்த கால மக்களுக்கு மட்டும் அல்ல, இந்தகால சந்ததிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளி அளவும் மாற்றம் இல்லை. காலம் சென்ற தலைவரின் புகழ் இந்த பூமி இருக்கும் அளவுக்கு நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்றாகவும் விளங்கும்.
நூற்றாண்டு விழாவின் மூலம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் இன்றைய சமுதாயத்தினர் அவருடைய நற்குணங்களை அறிந்து, போற்றி வணங்குவார்கள். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் முழுவீச்சில் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.