செங்குன்றம் பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
செங்குன்றம் பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
சென்னை,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு, ஒரு மரத்தை நட்டு தொடங்கிவைத்தார். இந்த ஆண்டில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை நகர போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 5–ந்தேதி உலக சுற்றுப்புற சூழல் தினத்தையொட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மரக்கன்றை நட்டு, மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அன்றைய தினம் கமிஷனர் அலுவலக வளாகத்தில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை நகரில் உள்ள 135 போலீஸ் நிலையங்கள் சார்பிலும், மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.
சென்னை நகர் முழுவதும் கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரோடு இணைந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், குடியிருப்போர் நலசங்கங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். சென்னை வடக்கு கோபாலாபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக 200 மரக்கன்றுகள் கடந்த வாரம் நடப்பட்டது.நேற்று செங்குன்றம் பகுதியில் எக்ஸ்னோரா அமைப்பினர் ஏற்பாடு செய்த ஒரே நாளில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன், மாதவரம் தாசில்தார் முருகானந்தம், மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன், எக்ஸ்னோரா நிர்மல், மாதவரம் துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, வருவாய் அதிகாரி உமாமகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் சுரேந்திரன், ரமேஷ்பாபு, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி, இந்த ஆண்டு முழுவதும் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் வரை நடுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் வார்தா புயலால் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துபோனது. எனவே புதிய மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை நகரில் பல்வேறு அமைப்பினரும் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.