அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆள் இல்லா விமானம் தயாரித்து பறக்கவிடும் நிகழ்ச்சி; பல்வேறு மாநில மாணவர்கள் பங்கேற்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஆள் இல்லா விமானம் தயாரித்து பறக்கவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Update: 2017-06-10 21:45 GMT

சென்னை,

நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் டெல்லி, மராட்டியம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆள் இல்லா உளவு விமானத்தை எப்படி தயாரிப்பது?, எந்த மாதிரியான பணிகளை அந்த விமானம் மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் விமானத்தை தயாரித்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பறக்கவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆள் இல்லா உளவு விமானத்தை தயாரித்த மாணவர்கள் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், ‘ஆள் இல்லா விமான தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்